ருள்மிகு உண்ணாமுலையம்மன் அம்மன் உடனுரை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் -திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோயில்

இறைவர்: அருணாசலேஸ்வரர்

இறைவி: உண்ணாமுலையம்மன்

தல மரம்: மகிழம்

தீர்த்தம்: பிரம தீர்த்தம்

திருக்கோவில் திறக்கும் நேரம்

காலை 5AM முதல் 12:30PM வரை, மாலை 4PM முதல் இரவு 9.30PM வரை திறந்திருக்கும்.

பூஜை நேரம்

5.30 a.m.- உஷக் கால

8.00 a.m.- காலசந்தி

12.00 p.m.- உச்சி கால பூஜை

5.30 p.m.- சாயரட்சை

7.30 a.m.- இரண்டாம் கால

9.00 p.m.- அர்தசாம பூஜை

தல சிறப்பு

'தீ' என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது..

Arulmigu Vunnamulai Amman With Arulmigu Arunachaleswarar Temple -Thiruvannamalai

வியாழன், 17 மார்ச், 2022

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோவில் கிரிவலம்


இன்று பௌர்ணமி கிரிவலம்

Today Full Moon Day Grivalam

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர்.

கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு தானம் செய்வது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், தானம் கொடுப்பதன் மூலம் நமது பாவங்கள் அகலும். கிரிவலம் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்குமென சித்தர்கள் கூறிச்சென்றுள்ளனர்.

✨தோஷம் நீக்கும் கிரிவலம்✨

கிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் பாவம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தையும் நமக்குத் தோற்றுவித்துவிடும்.

வயதானவர்களுக்கும் உடல் நலிவுற்றவர்களுக்கும், வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் .

✨வருடம் முழுவதும் கிரிவலம்✨

திருவண்ணாமலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் வலம் வருவதாகக் கூறப்படுகிறது. பவுர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டுமா? வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். பிறந்த நாள், திருமண நாள், மூத்தோர்களின் நினைவு நாள் என்று எந்நாளும் சிவபெருமானை நினைத்து வலம் வரலாம்.

✨எந்த நாளில் என்ன நன்மை✨

திங்கட்கிழமை கிரிவலம் வர இந்திர பதவி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை கிரிவலம் வர கடன், வறுமை நீங்கும். புதன் கிழமை கிரிவலம் வர கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும். வியாழக்கிழமை கிரிவலம் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை கிரிவலம் வர வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வர பிறவிப்பிணி அகலும். ஞாயிறு கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும்.

✨கிரிவலத்தில் சிவநாமம்✨

கிரிவலப் பாதையான 14 கி.மீ தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடியோ, சிவபுராணத்தை பாராயணம் செய்தபடியோ கிரிவலம் வரவேண்டும்.

🙏மலையே சிவமாகத் திகழும் உன்னத திருத்தலம் திருவண்ணாமலை🙏

ஜோதி வடிவான திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக திகழ்ந்து வருகிறது.கிரிவலம் வரும் எட்டு திசைகளையும் காக்கும் லிங்கங்களை தரிசனம் செய்வதனால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

இந்திரலிங்கம் தொடங்கி ஈசான்ய லிங்கம் வரை அஷ்ட லிங்க தரிசனம் கிரிவலத்தின் முழு பயனையும் பக்தர்களுக்கு தருகிறது. 

1.இந்திரலிங்கம்
 
அஷ்டலிங்க தரிசனத்தில் முதலில் அருள்தருவது இந்திர லிங்கம். இந்திரன் வழிபட்ட லிங்கம். கிழக்கு திசையில் அமைந்திருக்கும் இங்கு ஐராவதம் எனும் யானையின் மூலம் கேட்பதையெல்லாம் பக்தர்களுக்கு வாரி வழங்குகிறார் இந்திர தேவன். கையில் வஜ்ராயுதம் தாங்கியவராக அருள்தருகிறார். இங்கு வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யமும் பெருகும்.

2.அக்னிலிங்கம்

கிரிவல பாதையில் உள்ள அக்னி குளத்தையொட்டி அமைந்துள்ளது அக்னிலிங்கம். தென்கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன். ருத்ரமூர்த்திகள் மூவர் பல யுகங்களாக அங்க பிரதட்சணமாக கிரிவலம் வந்தனர். அவர்கள் திருமேனிகள் இந்த இடத்தில் வந்தபோது குளிர்ச்சிபெற்றது. அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சுயம்பு லிங்கம் காட்சியளித்தது. அந்த இடம்தான் இன்றளவும் அக்னி லிங்கமாக காட்சி தருகிறது. இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியன விலகும். எதிரிகள் தொல்லை, மனபயம் நீங்கும்.

3.எமலிங்கம்

கிரிவல பாதையில் 3வது லிங்கம் எமலிங்கம். எமராஜன் அங்கபிரதட்சணமாக கிரிவலம் சென்று சிவனை வழிபட்டார். அவர் கிரிவலம் நிறைவு செய்த இடத்தில் தாமரை மலர்ந்தது. அதிலிருந்து ஜோதிமயமான ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எமலிங்கம் என்று வரலாறு தெரிவிக்கிறது. இங்கு மனமுருகி பிரார்த்தனை செய்தால், பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தியாகும். சகோதரர்களின் உறவு நீடிக்கும்.

4.நிருதிலிங்கம்

சோண தீர்த்தத்துக்கு அருகே நிருதி லிங்கம் அமைந்துள்ளது. ஹரியை நிருதீஸ்வரர் வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது கிரிவல மலையின் தென்மேற்கு திசையில் ஒரு குழந்தையின் அழுகுரலும், பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது. அந்த இடத்தைநோக்கி நிருதீஸ்வரர் சென்றார். அவர் எதிரில் பிரதிரூப லிங்கம் தோன்றியது. அதுதான் நிருதிலிங்கம். இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு கிடைக்கும்.

5.வருணலிங்கம்:

நீருக்கு அதிபதியான வருணபகவான், அக்னி வடிவமான அண்ணாமலையை முழங்கால் பிரதட்சணமாகவும், ஒற்றைக்கால் பிரதட்சணமாகவும் கிரிவலம் வந்து வழிபட்டார். அப்போது கிரிவல பாதையின் ஒரு இடத்தில் வானம்தொடும் அளவுக்கு நீரூற்று வளர்ந்தது. அந்த புனிதநீரை உடல் முழுவதும் பூசி அண்ணாமலையை மெய்மறந்து வணங்கினார். வழி திறந்தபோது எதிரில் ஒளிமயமான வடிவில் லிங்கம் காட்சியளித்தது. அந்த லிங்கமே வருணலிங்கம். இங்குவழிபட்டால் கொடிய நோயிலிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.

6.வாயுலிங்கம்

மூச்சுக்காற்றை நிலை நிறுத்தியபடியே வாயுபகவான் கிரிவலம் சென்றார். அப்போது அடிஅண்ணாமலை அருகே சுகந்தமான நறுமணம் வீசியது. அதுவரை மூச்சை நிறுத்தி வலம் வந்த வாயுபகவான் நிலைதடுமாறினார். அங்கு பஞ்சக்ருத்திகா மலர்களின் நடுவே சுயம்பாக லிங்க வடிவில் சிவன் காட்சி அளித்தார். அதுவே வாயுலிங்கம். இக்கோயிலை அடையும்போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும். இங்கு வழிபாடு செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம். பெண்களுக்கு நல்வழி கிடைக்கும். கண் திருஷ்டி தொல்லைகள் நீங்கும்.

7.குபேரலிங்கம்

எல்லா செல்வங்களுக்கும் அதிபதியானவர் குபேரன். ஆனால் ஆண்டியான சிவனின் அருள் வேண்டி குதிகால் நடையுடன் குபேரன் கிரிவலம் சென்று வழிபட்டார். அப்போது விஷ்ணுவும், லட்சுமியும் சேர்ந்து அண்ணாமலையாரை சக்ரபாணி செய்யும் காட்சியை குபேரன் தரிசித்தார். அந்த இடத்தில் சுயம்புவாக தோன்றியதே குபேரலிங்கம். இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும். மன அமைதி கிடைக்கும்.

8.ஈசான்யலிங்கம்

நாமெல்லாம் சவம். அவன் ஒருவனே சிவம். உடலெல்லாம் சாம்பல் பூசி மயானம் காக்கும் ஈசன், நிலையற்ற வாழ்வை உணர்த்தும் லிங்கமே ஈசான்யலிங்கம். கண்களை மூடியபடி ருத்திர முனிவர் கிரிவலம் சென்றார். அப்போது ஈசான்ய மூலையில் ஒருவரின் அழுகுரல் கேட்டது. அங்கு சென்றபோது சுயம்பு லிங்கமாக காட்சியளித்தது. கிரிவல பாதையின் கடைசி லிங்கம் இது. இங்கு வழிபாடு செய்தால் மனம்ஒருநிலை அடையும்.

"கிரிவலம் வருவோம்"
"ஈசனருள் பெறுவோம்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக