ருள்மிகு உண்ணாமுலையம்மன் அம்மன் உடனுரை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் -திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோயில்

இறைவர்: அருணாசலேஸ்வரர்

இறைவி: உண்ணாமுலையம்மன்

தல மரம்: மகிழம்

தீர்த்தம்: பிரம தீர்த்தம்

திருக்கோவில் திறக்கும் நேரம்

காலை 5AM முதல் 12:30PM வரை, மாலை 4PM முதல் இரவு 9.30PM வரை திறந்திருக்கும்.

பூஜை நேரம்

5.30 a.m.- உஷக் கால

8.00 a.m.- காலசந்தி

12.00 p.m.- உச்சி கால பூஜை

5.30 p.m.- சாயரட்சை

7.30 a.m.- இரண்டாம் கால

9.00 p.m.- அர்தசாம பூஜை

தல சிறப்பு

'தீ' என்கிற அக்னித்தலமாக திருவண்ணாமலையை, நம் முன்னோர் வழிபட்டனர். அக்னியே அனைத்திற்கும் மூலம். ஈஸ்வரன், அருணாசலேஸ்வரனாக, மலை உருவில் காட்சி வழங்கும் திருவண்ணாமலை, பஞ்சபூத ஸ்தலங்களுள் மிகவும் விசேஷமானது..

Arulmigu Vunnamulai Amman With Arulmigu Arunachaleswarar Temple -Thiruvannamalai

Thiruvannamalai Murugar

 
 திருவண்ணாமலையில் முதல் வணக்கம் முருகப்பெருமானுக்கே
Thiruvannamalai Murugar Temple 



திருவண்ணாமலை தலத்தில் முதல் சன்னதியாக முருகப்பெருமானே வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். எனவே திருவண்ணாமலையில் முதல் வணக்கம் முருகப்பெருமானுக்கே செய்யப்படுகிறது.

பொதுவாக ஒரு ஆலயத்துக்குள் நுழைந்தால் முதலில் நாம் முழு முதல் கடவுளான விநாயகரை வழிபடுவோம். அதற்கேற்ப ஆலயங்களில் விநாயகர் சன்னதி முதலில் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் திருவண்ணாமலை தலத்தில் அப்படி அல்ல. முதல் சன்னதியாக தமிழ் கடவுள் முருகப்பெருமானே வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். திருவண்ணாமலை ராஜகோபுரத்தில் விநாயகர் இடம் பெற்றிருந்தாலும் சன்னதி என்ற கணக்கில் வரும்போது திருவண்ணாமலை ஆலயத்தில் நம்மை வரவேற்பது முருகப்பெருமான்தான். எனவே திருவண்ணாமலையில் முதல் வணக்கம் முருகப்பெருமானுக்கே செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை தலத்தை பொறுத்தவரை அனைத்து கடவுள்களின் அருள்கடாட்சமும் நிரம்பி இருக்கும் தலம் ஆகும். இதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் எந்த சிவாலயத்துக்கும் இல்லாத சிறப்பு திருவண்ணாமலை ஆலயத்துக்கு தனித்துவமாக உள்ளது.அதாவது திருவண்ணாமலையில்தான் சிவபெருமான் தன்னை அக்னி வடிவமாக வெளிப்படுத்திக் கொண்டார். பிறகு அந்த அக்னி வடிவமே மலையாக மாறி சிவனாக வழிபடப்படுகிறது. அந்த சிவ மலையை உமையாள் பார்வதிதேவி தவம் இருந்து கிரிவலம் வந்து  ஈசனிடம் பாதி உடலை பெற்றாள்.

அதுபோல விநாயக பெருமான் இந்த தலத்தில் மன்னனுக்காக தோன்றிய அதிசயம் நடந்துள்ளது. ஈசனின் வாகனமான நந்தியும் ஒரு தடவை இந்த தலத்தில் உயிர் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இத்தகைய தலத்தில் முருகப்பெருமான் தோன்றாமல் இருப்பாரா? தோன்றி தன் பக்தர்களுக்காக அருள்பாலித்து இருக்கிறார்.

ஒருதடவை அல்ல... இரண்டு தடவை முருகப்பெருமான் திருவண்ணாமலை தலத்தில் தன்னை வெளிப்படுத்தி காட்டி உள்ளார். இந்த அற்புதங்களின் பின்னணியில் சில வரலாறுகள் உள்ளன. அந்த வரலாறுகள் அருணகிரிநாதருடன் தொடர்புடையவை. அருணகிரிநாதர் என்றதும் நமக்கு திருப்புகழ்தான் நினைக்கு வரும். அதிலும் “முத்தை தரு பத்தி திருநகை” என்ற பாடலும் சேர்ந்து நினைவுக்கு வரும். இளம்வயதில் பெண்கள் மீது மோகம் கொண்டு அலைந்த அருணகிரிநாதர் அவரது சகோதரியால் மனம் திருந்தினார். இவ்வளவு நாட்களும் வீணாக வாழ்ந்து விட்டோமே என்று அண்ணாமலையார் ஆலயத்துக்குள் சென்று அமர்ந்து யோசித்தார். தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்.

உயிரை மாய்த்துக் கொள்வதற்காக வல்லாள மகாராஜா கோபுரத்தில் ஏறி கீழே குதித்தார். அப்போது முருகப்பெருமான் அவரை தாங்கி பிடித்துக் கொண்டார். அவரது உடல்நோயையும், மன நோயையும் குணப்படுத்திய முருகப்பெருமான், தன்னை புகழ்ந்து பாடும்படி அருணகிரிநாதருக்கு உத்தரவிட்டார்.

அருணகிரிநாதர் தனக்கு எப்படி பாட தெரியும் என்று கேட்டார். உடனே அருணகிரிநாதரின் நாக்கில் “முத்தை தரு” என்று எழுதிய முருகப்பெருமான் “இனி என்னை புகழ்ந்து பதிகங்கள் பாடு” என்று உத்தரவிட்டார். அடுத்த நிமிடமே அருணகிரிநாதர் மடைதிறந்த வெள்ளமென பதிகங்களை பாட தொடங்கினார். சுமார் 16 ஆயிரம் பாடல்களை அவர் பாடி குவித்து விட்டார். ஆனால் நமக்கு கிடைத்து இருக்கும் திருப்புகழ் பாடல்கள் 1,307 மட்டுமே. இந்த நிகழ்வு மூலம் திருப்புகழ் பிறப்பதற்கு அடித்தளம் அமைந்த ஆலயமாக திருவண்ணாமலை ஆலயம் கருதப்படுகிறது.

அருணாகிரிநாதர் தற்கொலை செய்வதற்காக ஏறி குதித்த வல்லாள மகாராஜா கோபுரம் பகுதியில் வலது பக்கத்தில் முருகப் பெருமானுக்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது. இந்த சன்னதி கோபுரத்து இளையனார் சன்னதி என்று அழைக்கப்படுகிறது. கோபுரத்தில் இருந்து குதித்த அருணகிரி நாதரை ஆட்கொண்டதால் இந்த இடம் கோபுரத்து இளையனார் சன்னதி என்று பெயர் பெற்றது.

இந்த சன்னதி போன்றே கம்பத்து இளையனார் சன்னதியும் தனித்துவம் கொண்டது. அதன் பின்னணியிலும் ஒரு வரலாறு இருக்கிறது. திருவண்ணாமலையில் சம்பந்தாண்டான் என்ற தேவி உபாசகர் வசித்து வந்தார். அவருக்கு அருணகிரிநாதரை சுத்தமாக பிடிக்காது. அருணகிரிநாதரை ஒழித்து கட்ட வேண்டும் என்று அவர் நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார். திருவண்ணாமலையை ஆண்டு வந்த பிரபு தேவமகாராஜாவின் அரண்மனையில் உயர் பதவி வகித்ததால் அவர் சொன்னதை எல்லாம் அரசர் கேட்டார். ஒரு தடவை அவர் அருணகிரிநாதரை போட்டிக்கு அழைத்தார்.

      யார் தமது கடவுளை எல்லோரின் முன்னிலையில் நிறுத்துகின்றாரோ அவரே சிறந்தவர் எனும் போட்டியை நடத்த அவர் சவால் விடுத்தார். இந்த சவாலை அருணகிரிநாதரும் ஏற்றுக் கொண்டார். முதலில் சம்பந்தாண்டான் தான் வழிபடும் காளியை அழைத்தார். ஆனால் காளி வரவில்லை. இதையடுத்து அருணகிரிநாதர் முருகப்பெருமானை வேண்டினார். “மயிலும்பாடி நீயாடி வரவேணும்” என்ற திருப்புகழ் பாடலை மனம்உருக பாடினார். அருணாகிரிநாதரின் முழுமையான  அர்ப்பணிப்பு பக்தியால் அங்கிருந்த மண்டபத்து தூண் வெடித்தது. அந்த தூணில் இருந்து முருகப்பெருமான் மயிலோடு வந்து காட்சி அளித்தார். இதை கண்டு அனைவரும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர்.

அருணகிரி நாதருக்காக முருகப்பெருமான் இரண்டாவது தடவையாக மீண்டும் தோன்றி காட்சி அளித்ததால் முருகன் பாதம் பட்ட இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த இடத்தில் முருகப்பெருமானுக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. முருகன் தூணில் இருந்து தோன்றும் காட்சியும் அந்த மண்டபத்து தூணில் காட்சி அளிக்கிறது. அந்த மண்டபம் கொண்ட முருகன் சன்னதி கம்பத்து இளையனார் சன்னதி என்று அழைக்கப்படுகிறது.

கம்பத்தில் இருந்து முருகன் தோன்றியதால் கம்பத்து இளையனார் என்ற பெயர்  பெற்றுள்ளது. முருகப்பெருமானை ஏன் இளையனார் என்று குறிப்பிடுகிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படலாம். சிவபெருமான் - பார்வதி தம்பதியருக்கு முதல் குழந்தை விநாயகர். இரண்டாவது குழந்தை முருகப்பெருமான். முதல் மகனான விநாயகரை பெரியவர் என்றும், இளைய மகனான முருகப்பெருமானை இளையவர் என்றும் அழைத்தனர். அந்த இளையவர்தான் நாளடைவில் இளையனார் என்று மருவியது.

கோபுரத்து இளையனார், கம்பத்து இளையனார் போன்று முருகப்பெருமானின் மற்றொரு சன்னதியான  பிச்சை இளையனார் சன்னதியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த சன்னதி கிளி கோபுர வாசலின் இடது பக்கத்தில் அமைந்துள்ளது. உலக உயிர்களை காப்பதற்காக கையில் கபாலம் ஏந்திய அண்ணாமலையாரின் தத்துவத்தை பிரதிபலிக்க இந்த சன்னதியில் முருகப்பெருமான் பிச்சை இளையனாராக வீற்றிருந்து சொல்கிறார்கள்.

கல்யாண சுந்தரர் சன்னதி கட்டப்பட்டபோது பிச்சை இளையனார்  சன்னதியும் கட்டப்பட்டது. விஜய நகர அரசனான 2-ம் தேவராயர் பிச்சை இளையனார் சன்னதியை கட்டியதாக குறிப்புகள் உள்ளன. இந்த சன்னதி அமைந்துள்ள கிளி கோபுரத்தில் இன்றும் அருணகிரிநாதர் முருகனின் அருளோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அதற்கு காரணம் இந்த கோபுரத்தில்தான் அருணகிரிநாதர் தனது உடலை பறிகொடுத்தார். அதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உள்ளது.

ஒரு சமயம் அரசர் பிரபுதேவராயருக்கு கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டது. அந்த கோளாறை சரிப்படுத்த வேண்டும் என்றால் சொர்க்கத்தில் இருக்கும் பாரிஜாத மலரை கொண்டு வந்தால்தான் முடியும் என்று சம்பந்தாண்டான் சதி திட்டத்துடன் கூறினான். சொர்க்கத்திற்கு அருணகிரிநாதரை அனுப்பி வைத்தால் அவர் பாரிஜாத மலரை கொண்டு வந்து விடுவார் என்றும் மன்னனிடம் தெரிவித்தான். மன்னனும் பாரிஜாத மலரை எடுத்து வரும்படி அருணகிரிநாதருக்கு உத்தரவிட்டார். அதை அருணகிரி நாதர் ஏற்றுக் கொண்டார்.

கிளி கோபுரத்துக்கு வந்த அவர் கூடு விட்டு கூடு பாயும் திறமையால் இறந்து கிடந்த ஒரு கிளியின் உடலுக்குள் தனது உயிரை புகுத்தினார். உயிரற்ற தனது உடலை கோபுரத்தின் ஒரு பகுதியில் கிடத்திவிட்டு பாரிஜாத மலரை எடுப்பதற்காக மேல் உலகிற்கு சென்று விட்டார். இதற்கிடையே அருணகிரி நாதரின் உடலை தேடிய சம்பந்தாண்டான் அது கோபுரத்தில் கிடப்பதைக் கண்டுபிடித்தான். அங்கேயே அவரது உடலை தீவைத்து எரித்து சாம்பலாக்கிவிட்டான்.  

பாரிஜாத மலருடன் மேல் உலகத்தில் இருந்து திரும்பி வந்த அருணகிரி நாதர் தனது உடல் எரித்து அழிக்கப்பட்டதை கண்டு வேதனை அடைந்தார். மீண்டும் வேறு ஒருவர் உடலுக்குள் செல்ல முடியாது என்பதால் கிளி உடலுடனே இருந்துவிட்டார். அவர் கிளி உடலுடன் அந்த கோபுரத்தில் தங்கியிருந்து முருகன் மீது பதிகங்களை பாடினார். இதனால் அந்த கோபுரம் கிளி கோபுரம் என்று அழைக்கப்பட்டது.

அந்த கோபுரத்தில் கிளி உடலுடன் இருந்து அருணகிரி நாதர் பாடிய பாடல்களின் தொகுப்பு ‘‘கந்தர் அனுபூதி’’ என்று அழைக்கபடுகிறது. எனவே கந்தர் அனுபூதி பிறந்த தலம் என்ற சிறப்பும் திருவண்ணாமலை தலத்திற்கு உண்டு. நீண்ட நாட்கள் அந்த கோபுரத்தில் இருந்த அருணகிரிநாதர் பிறகு திருத்தணிக்கு சென்று முருகப்பெருமானின் கையில் தஞ்சம் அடைந்ததாக சொல்கிறார்கள்.

அருணாகிரி நாதரால் முருகப்பெருமானின் பாதம் இரண்டு தடவைபட்டதால் திருவண்ணாமலை தலத்தில் முருகப்பெருமானுக்குரிய அனைத்து விழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. குறிப்பாக அறுபடை வீடுகளில் நடக்கும் அனைத்து முருகன் விழாக்களும் குறைவின்றி திருவண்ணாமலையிலும் நடத்தப்படுகின்றன. தைப்பூச தினத்தன்று அறுபடை வீடுகளையும் மிஞ்சும் வகையில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் காவடி ஏந்தி திருவண்ணாமலைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
 
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக