Arulmigu Arunachaleswarar Temple Thiruvannmalai
திருவண்ணாமலை அருணாசலசுவாமியின் அற்புத மகிமை
சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. காசியில் நீராடினால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையை இருந்த இடத்திலிருந்து நினைத்தாலே முக்தி கிடைத்துவிடும். ஒரு முறை இந்த தலத்திற்கு சென்றால் மீண்டும் மீண்டும் செல்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும். அப்படி ஒரு அருட்சக்தி இந்த மலைக்கு உள்ளதால் இந்த மலையை காந்தமலை என்றும் அழைக்கிறார்கள்.
“சீல முனிவோர்கள் செறியு மலை..
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..
ஞான நெறி காட்டு மலை..
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..
அஞ்ஞானக் கங்குல் அகற்று மலை – அன்பருக்கு
மெய்ஞானச் சோதி விளக்கு மலை
ஞானத் தபோதனரை வா என்று அழைக்கு மலை
அண்ணாமலை”
-என்றெல்லாம் போற்றப்படும் திருவண்ணாமலை திருத்தலம், அண்ணாமலை என்றும் அருணாசலம் என்றும் அழைக்கப்படுகின்றது. அருணாசலம் என்பதைப் பிரித்தால் அருணம் + அசலம் என்று வரும். அருணம் என்றால் நெருப்பு. அசலம் என்றால் மலை. ஆகவே இது நெருப்பு மலையாக விளங்குகிறது. அதனால் தான் இதனை அக்னி பர்வதம் என்றும் அழைப்பர் பெரியோர். இந்த அக்னி பர்வதமாகிய நெருப்பு மலையே அருணாசலமாகக் காட்சியளிக்கிறது. அண்ணாமலை என்றால் அண்ண முடியாத மலை என்பது பொருளாகும். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறது என்பதே உண்மை. இது வெறும் கல் மலை எல்ல. பல்வேறு அதிர்வுகளைத் தன்னகத்தே கொண்டது என்பதே உண்மை.
மலை தோன்றிய வரலாறு:
ஒரு முறை அயனுக்கும் அரிக்கும் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இருவரும் தத்தம் தொழில்களை மறந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் இருவருக்கும் இடையே பெரும் போரும் மூண்டது. பாதிக்கப்பட்ட தேவர் முதலானோர் சிவனைச் சரணடைந்தனர். சிவன் அவர்களுக்கு அபயம் அளித்தார். போர் புரிந்து வரும் இருவருக்கும் இடையில் பெரும் அக்னி மலையாக தோன்றினார். இந்த ஒளி மலையைப் பார்த்த திருமாலும், பிரம்மனும் அளவு கடந்ததுள்ள இந்த மலையின் அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றரோ அவரே பெரியவர் என்பதாக முடிவு செய்தனர்.
பிரம்மா அன்னப்பறவையாய் மாறி ஈசனின் திருமுடி தேடிச் சென்றார். விஷ்ணுவோ வராக அவதாரம் எடுத்து சிவனின் திருவடி தேட முற்பட்டார். அடி முடியை இருவரும் காண முடியாததால் தாம் தான் உயர்ந்தவர் என்ற எண்ணம் நீங்கி சிவனைச் சரண் அடைந்தனர். (சிவனின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு சிவனின் திருமுடியைக் கண்டதாக பிரம்மா பொய் கூறியதும் அதனால் சீற்றமுற்ற சிவன் பிரம்மாவுக்கு வழிபாடு இல்லாமல் போகக் கடவது என்றும், தாழம்பூவை இனி தன் பூஜையில் பயன்படுத்தக் கூடாது என சபித்ததும் தனிக்கதை
சினம் தணிந்த சிவபெருமான் ‘நாம் இத்தலத்தில் அருள்பாலித்ததால் இன்று முதல் இத்தலத்தைச் சுற்றிலும் மூன்று யோசனை தூரம் வரைக்கும் தூய்மையான புனித பூமியாக விளங்கும். அகண்ட ஒளி வடிவாயுள்ள இம்மலை சிறிய உருவம் கொண்ட மலையாக ஆகும். இத்தலத்தை நினைப்பவர்களுக்கு பிறவி நோய் நீங்கும். இந்த மலையும், நகரமும் பிரளய காலத்திலும் அழிவின்றி நிற்கும். கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் மலையின் உச்சியில் யாம் காண்பிக்கும் பேரொளியைக் கண்டு தொழுவோர்க்கும் அவர் தம் இருபத்தொரு தலைமுறையில் உள்ளவர்களுக்கும் வீடு பேறு உண்டாகும்’ என்று கூறி ஆசிர்வதித்தார்.
திருவண்ணாமலை மலையின் சிறப்பு:
இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது. பௌர்ணமி தோறும் பல இலட்சம் பக்தர்கள் இங்கு மலை வலம் வருகின்றனர். இம்மலையின் பெயரினை அடிக்கடி சொல்லி வருவது திரு ஐந்தெழுத்தை (ஓம் நமசிவாய) கோடி முறை உச்சரிப்பதற்குச் சமம் என்பது புராணம் கூறும் செய்தியாகும்.
இம்மலையின் சிறப்பை,
“தர்சனாத் அப்ரஸதசி
ஜனனாத் கமலாலயே
காச்யாந்கி மரணான் முக்த்தி
ஸ்மரணாத் அருணாசலே:”
“கயிலையைக் கண்டால் முக்தி. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் மரணமடைந்தால் முக்தி. அருணாசலத்தை நினைத்தாலே முக்தி.” என்ற பொருள் தணிக்கும் மேற்கண்ட ஸ்லோகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அண்ணாமலை வெறும் மலையல்ல; இன்னும் பற்பல யோகியர்களும் சித்தர்களும் தவம் செய்யும் அற்புத மலை. யுகம் தோன்றித் தோன்றி அழிந்தும் மாறாத ஒரே மலை. உள்ளுக்குள் பல்வேறு அசைவுகநிளைத் தன்னகத்தே கொண்ட மலை. உலகின் பல இடங்களில் இருந்தும் பல யோகியர்களும், சித்தர்களும், மகான்களும் இன்னமும் இங்கே வந்து தவம் புரியும் பெருமை மிக்க மலை. காந்தம் இரும்பை இழுப்பது போல தன் பேரொளியால் ஞான வேட்கை உடையோர்களை தன்னகத்தே இழுக்கும் மலை.
அதனால் தான் இம்மலையின் சிறப்பை குரு நமசிவாயர் தமது ‘அண்ணாமலை வெண்பா’வில்
தொண்டர் பணியுமலை..
தந்த்ர மலை யந்த்ர மலை..
சாற்றிய பஞ்சாக்கரமாம் மந்த்ர மலை..
பிறவி நோய்க்கு மருத்து மலை..
அண்ணாமலை
என்றும்
தொண்டர் இணங்கு மலை..
வானோரும் ஏனோரும் போற்றி வணங்கு மலை..
தன் அடியார் செய்த குறை எல்லாம் மறக்கு மலை..
நாளும் குறைவிலாச் செல்வம் அளிக்கு மலை..
என்றும்
பற்பலவாறு புகழ்ந்து பாடியிருக்கிறார்.
திருவண்ணாமலை மலையின் வேறு பெயர்கள்:
கவுரி நகர், தேகநகர்,அண்ணாமலை, அண்ணாநாடு, அண்ணாவூர், அருணாசலம், சிவலோக நகர், வாயு நகர், அறிவு நகர், தூய்மை நகர், தென்கயிலாயம், சோணமலை, அருணகிரி, முக்தி புரி, மோட்ச புரி என இம்மலைக்கு பல பெயர்கள் உண்டு. இப்பூவுலகம் என்றைக்கு உண்டாயினவோ அன்றே உண்டான மலை அண்ணாமலை. சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள் அனைவரும் இம்மலையினைச் சிவலிங்கமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்.
கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் தான் ஆன்றோர் பலர் இன்னமும் காலணி அணியாதுதான் இப்பகுதிக்குச் செல்வர்.
மலை வலம் வர உகந்த நாட்கள்:
எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களே! இருந்த போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும்.
புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் தன் பரிவாரங்களூடன் மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.
சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.
அமாவாசை, பிறந்த நாள், திருமண நாள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற புண்ணிய தினங்களிலும் மலை வலம் வரலாம்.
சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். சோமவாரம், சோமப் பிரதிஷணம் போன்றவற்றின் மூலம் நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால், திரு அண்ணாமலை அக்னி மலை. அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரன். ஆகவே இந்தக் கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு நடக்கின்றது. செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. சத்குரு சேஷாத்ரி சுவாமிகளும் செவ்வாயன்று மலை வலம் வருதலை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.
ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும்.
‘அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!’ -என்கிறது தேவாரமும்.
மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜ சூர்ய யாகம் செய்த பலன் கிடைக்கும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும். மலையைப் பற்றியும், மலை சுற்றுவதைப் பற்றியும் நினைப்பவர்களுக்கே இந்தப் பலன் என்றால், மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன்…??? அவர்கள், கைலாசத்திற்குள் நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி, மோட்சமாகிய உயர் பதவியை அடைவார்கள் என்று அருணாசல புராணம் தெரிவிக்கின்றது.
அண்ணாமலை கிரிவல மந்திரங்கள்!
ஒவ்வொரு முறையும் கிரிவலம் ஆரம்பிக்கும் போதும்,கழுத்தில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் உடைய மாலையை அணிவது நன்று;
முதல் முறை கிரிவலம் செல்லும் போது:
"ஓம் அகத்தீசாய நமஹ"
"ஓம் அருணாச்சலாய நமஹ"
( நம் அனைவருக்கும் தலைமை குரு அகத்தியர்; இவர் தான் பூமி முழுவதும் தமிழ் மொழியைப்பரப்பினார்; எனவே, குருவின் அருள் நமக்குத் தேவை;
3,00,00,000 தடவை ஓம் நமச்சிவாய என்று ஜபித்தால் என்ன புண்ணியமோ அது ஒரே ஒரு முறை ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ அல்லது ஓம் அண்ணாமலையே நமஹ என்றோ ஒரே ஒரு முறை ஜபித்தாலே கிட்டிவிடும் என்று அருணாச்சல புராணம் கூறுகிறது.)
இரண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:
"ஓம் ஆதிகவசம் சிவகவசம்
சிவன் பிறந்த பரம கவசம்
ஆதிசிவ கவசாய கட்டு சிவாகா"
மூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;
"சிவயநம-அம்-உம்-சிம்-க்லீம்-ஸ் ரீம்- ஓம்- ரம்-மம்-யம்-ஓம்"
நான்காம் முறை கிரிவலம் செல்லும் போது;
"நமச்சிவாய"
ஐந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:
"அருணாச்சல-சிவ"
ஆறாம் முறை கிரிவலம் செல்லும் போது:
"ஓம்-ஆம்-ஹெளம்-செள"
ஏழாம் முறை கிரிவலம் செல்லும் போது:
"சிவையை-நம"
எட்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:
"ஓம்-ரீங்-சிவசிவ"
ஒன்பதாம் முறை கிரிவலம் செல்லும் போது:
"சிவாய-நம"
பத்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:
"ஓம்-நமசிவாய-சிவாய-நம-ஓம்"
பதினோராம் முறை கிரிவலம் செல்லும் போது;
"சிவ-சிவ"
பனிரெண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:
"சிவாய-சிவாய"
பதிமூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;
"சிவாய-நம-ஓம்"
பதினான்காம் முறை கிரிவலம் செல்லும் போது:
"சிவய-சிவ"
பதினைந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:
"அருணாச்சலாய-சிவ-நமஹ"
16ம் முறையில் இருந்து 1008 ஆம் முறை வரை கிரிவலம் செல்லும் போது அருணாச்சலேஸ்வரரே உங்களுக்கு மந்திர உபதேசம் செய்வார்;
மறுபிறவி இல்லாத முக்தியை அடைய இதுவே வழி;
"ஓம் அகத்தீசாய நமஹ"
"ஓம் அருணாச்சலாய"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக